புதுக்கோட்டை, சிவபுரம், ஜெ.ஜெ. கலை, அறிவியல் கல்லூரி, வேதியியல் துறை, "ரெசனான்ஸ் சங்கம்" சார்பில் 18.08.2022 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு விரிவுரையில், திருச்சிராப்பள்ளி, தந்தைப் பெரியார் கலைக் கல்லூரி, வேதியியல் துறை, உதவிப்பேராசிரியர் முனைவர் C.பிரகதீஸ்வரன் அவர்கள் "வண்ண வேதியியல்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அவர் தம் உரையில், பல வண்ணங்களில் உள்ள வேதிப் பொருட்களைப் பற்றியும், அது எவ்வாறு மனித வாழ்க்கைக்கு பயன்படுகிறது என்றும் கூறினார். அவற்றின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளை எடுத்துக்கூறி அவற்றினால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் விளக்கினார். உதாரணமாக வண்ண வேதிப்பொருள்கள் உணவில் பாதுகாப்பானாக பயன்படுகிறது.
அவற்றில் சில, சோடியம் பென்சோயேட், சல்பர் டை ஆக்சைடு மற்றும் சோடியம் நைட்ரேட் போன்றவை உணவில் நுண் கிருமிகளின் வளர்ச்சியைத் தடுத்து, உணவுப் பொருட்களை கெடாமல் பாதுகாக்கிறது. அதேபோல அசிடிக் அமிலத்தில் இருந்து தயாரிக்கப்படும் வினிகர் ஆனது ஊறுகாய் கெடாமல் பாதுகாக்கிறது. நாம் அன்றாடம் சுவைக்காக விரும்பி சாப்பிடும் பல குளிர்பானங்களில் சுவையூட்டிகளாக பச்சை, சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிலங்களைத் தரும் சோடியம் பென்சோயேட், பென்சாயிக் அமிலம் போன்றவை சேர்க்கப்படுகிறது. பியூட்டிலேட்டட் ஹைட்ராக்சி டொலூவின்(BHT) மற்றும் பியூட்டிலேட்டட் ஹைடிராக்ஸி அனிசோல்(BHA) போன்ற வேதிப்பொருட்களானது, துரித உணவோடு சேர்த்து சாப்பிடும் தக்காளி சட்னி மற்றும் குழம்பு ஆகியவற்றில் சுவைக்காகவும், நிறத்திற்காகவும் சேர்க்கப்படுகிறது. தற்காலத்தில் அனைவரும் சர்க்கரை நோயினால் அவதியுறும் இந்த நேரத்தில், சர்க்கரை சுவையை கொடுக்கக்கூடிய வேதிப்பொருட்களை கொண்டு தயார் செய்யக்கூடிய மாத்திரைகள் உணவில் பயன்படுகின்றன.
அவைகள் சுவையை மட்டுமே தந்து, ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை அதிகமாகாமல் பார்த்துக் கொள்கிறது. எரித்ரோசின், அல்லூர் சிவப்பு மற்றும் சில சாய வகைகள் நிறமூட்டிகளாக உணவில் பயன்படுகிறது. இவைகள் கொடுக்கும் சிவப்பு, நீலம், ஊதா, ஆரஞ்சு மற்றும் பச்சை நிறங்கள் ஆனது, கண்கவர் வண்ணங்களாக இருப்பதனால் நம்மை ஈர்த்து உணவை உட்கொள்ளத் தூண்டுகிறது. பெரும்பாலும் உணவகங்களிலும், இனிப்பகங்களிலும் தான் இப்படிப்பட்ட பல்வேறு வண்ண நிறங்களை கொண்ட வேதிப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன என்றும் கூறினார். இவைகள் பார்ப்பதற்கு அழகாகவும், சாப்பிட சுவையாகவும் இருப்பதனால் இவைகளை நாம் அடிக்கடி உணவாக உட்கொள்ளக்கூடாது என்றும் இவைகளால், அஜீரண கோளாறு, நெஞ்சு எரிச்சல், தலைவலி போன்ற சிறிய உபாதைகளும் கேன்சர், பிறவிக் கோளாறு, கண் பாதிப்பு மற்றும் மலட்டுத்தன்மை போன்ற பெரிய பாதிப்புகளும் வரக்கூடும் என்றும் பட்டியலிட்டார்.
ஆகவே முடிந்தவரை உணவகங்களில் துரித உணவு உட்கொள்வதையும், இனிப்பகங்களில் வகைவகையான இனிப்புகளை எடுத்துக் கொள்வதையும் தவிர்ப்பதன் மூலம் நாம் பல நோய்களில் இருந்து தப்பிக்கலாம் என்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். இறுதியில் மாணாக்கர்களின் கேள்விகளுக்கு விடையளித்தார். முன்னதாக வேதியியல் துறைத் தலைவர் முனைவர் சி.முத்துக்குமார் விருந்தினரை வரவேற்று, பொன்னாடை போர்த்தி சிறப்பித்தார். முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவி செல்வி.கார்த்திகா தேவியின் நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.