26th Sports Day






புதுக்கோட்டை ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரியின் (தன்னாட்சி) 26-ஆவது விளையாட்டு விழா 13.04.2022 அன்று நடைபெற்றது. விழாவிற்கு SAI சிறப்புப் பயிற்றுநர் விருது பெற்ற கபடி பயிற்றுநர் முனைவர் R.ஆனந்த கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்குப் பரிசுகள் வழங்கி பாராட்டிப் பேசினார். அவர் தம் உரையில் மனிதனுக்கு மானமும் அறிவும் அவசியம். அந்த அறிவைப் பெற வேண்டுமானால் உடல்நலம், மனநலம், உயிர்நலம் ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்த பலம் பெற்று இருக்க வேண்டும். இந்த மூன்றும் அமைந்தால் மட்டுமே நற்சிந்தனையும் நற்செயலும் உருவாக இயலும். அதன் தொடர்ச்சியாகவே நாம் எந்தக் கல்வியையும் பெற முடியும். எனவே, விளையாட்டு என்பது உடற்கல்வித் துறையைச் சார்ந்த மாணாக்கர்களுக்கு மட்டுமன்று, எந்தத் துறையில் பயிலும் மாணவர்களுக்கும் விளையாட்டு அவசியமான தொன்றாகும். விளையாட்டு, போட்டி நிலையில் நடத்தப்பெற்றாலும், பரிசு பெறுதல் அதன் இலக்காக இருந்தாலும், அடிப்படையில் மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதற்கே நடத்தப்பெறும் ஒன்றாகும். மகிழ்ச்சியையும் அற வழியிலேயே அடைவது அவசியம் என்று உணர்ந்தே மாணவர்கள் உருவாக்கப் படுகிறார்கள். இன்றைய நிலையில் ‘உடல்பருமன்’ என்கிற பிரச்சனை மனிதச் சமுதாயத்தை அச்சுறுத்தக் கூடிய ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால், ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியில் எவரைப் பார்க்கிலும் அப்பிரச்சனையைக் காண இயலவில்லை. அது இக்கல்லூரியும் கல்லூரியின் விளையாட்டுத்துறையும் மாணாக்கர்களுக்கு விளையாட்டுக்கான வாய்ப்புகளை எந்தளவிற்கு வழங்குகிறது என்பது தெரிகிறது. பாரதியார் காற்று எனும் வசன கவிதையில் உடல்நலம் போற்ற உறுதியடைந்த மனமும் வேண்டும் என்று கூறுகிறார். எனவே, நீங்கள் உங்களைச் சிறப்பாக உருவாக்கிக் கொள்வதன் மூலம் நல்ல வலிமையான மனித சமுதாயம் உருவாகிட உதவிட வேண்டும் என்று மாணாக்கர்களையும் பாராட்டிப் பேசினார். முன்னதாக, உடற்கல்வித் துறைத்தலைவர் முனைவர் K.ஜெகதீஸ்பாபு விளையாட்டு ஆண்டறிக்கையை வாசித்தார். கற்பக விநாயகா கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் முனைவர் கவிதா சுப்பிரமணியன் தலைமையேற்க, ஜெ.ஜெ.கல்விக் குழுமத்தின் செயலர் N.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் ஜ.பரசுராமன் வரவேற்க, உடற்கல்வித் துறை உதவிப்பேராசிரியர் K.தயாளன் நன்றியுரை கூறினார்.