புதுக்கோட்டை, சிவபுரம், ஜெ.ஜெ கலை, அறிவியல் கல்லூரி, ரேசனன்ஸ் சங்கம் சார்பில் சிறப்பு விரிவுரை ஆனது "உவமைகளின் மூலம் வேதியியல் கருத்துக்கள்" என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் பூண்டி புஷ்பம் கல்லூரி, வேதியியல் துறைத் தலைவர், பேராசிரியர் வீ.நந்தகுமார் சிறப்புரை ஆற்றினார்.
இந்த விரிவுரையில், அவர் வேதியியலின் அடிப்படை கருத்துக்களை உவமைகளின் மூலம் விளக்கினார்.
உதாரணமாக சோப்பின் மூலக்கூறு வடிவமானது விலாங்கு மீனை ஒத்து உள்ளதையும், சோப்பின் அழுக்கு நீக்கும் திறனையும் விரிவாக எடுத்துரைத்தார்.
சோப்பு மூலக்கூறானது, நீர் விரும்பும் மற்றும் நீர் வெறுக்கும் தன்மையை கொண்டுள்ளது. அதனால் தான் அழுக்கானது எளிதில் வெளியேறுகிறது. அதே போல வெப்ப உமிழ் மற்றும் வெப்ப கொள் வினைகளை உவமைகளின் மூலம் எடுத்துரைத்தார். அயனிப் பிணைப்பு மற்றும் சகப்பிணைப்பு களையும், அவை எவ்வாறு எலக்ட்ரான்களை பகிர்ந்து மந்தவாயுக்களின் நிலையை பெறுகிறது என்றும் எதிர் சவ்வூடு பரவலை, பாயசத்தில் உலர்திராட்சை ஏற்படுத்தும் வினைகளை தொடர்புபடுத்தி விளக்கினார்.
அதேபோல மழை வருவதற்கு முன்னால் நமது உடலின் தட்ப வெட்பம் வேறுபட்டு அதிக வியர்வை ஏற்படுத்துதலை, வேதியியல் அடிப்படையில் எடுத்துரைத்தார்.
இறுதியில் மாணவர்களின் கேள்விகளுக்கு விடையளித்தார். முன்னதாக வேதியியல் துறை தலைவர் முனைவர் சி.முத்துக்குமார் விருந்தினரை கௌரவித்து, வரவேற்புரையும், முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவி அனகா.பி. கணேஷ் நன்றி உரையும் ஆற்றினர்.