Womens Day Celebration






புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) வளாகத்தில் 07.03.2019 அன்று மகளிர் தின விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் 800-க்கும் மேற்பட்ட மாணவியர்கள் கலந்துக் கொண்டனர். ஜெ.ஜெ.கலை அறிவியல் கல்லூரியின் துணை முதல்வர் சு.சுதா வரவேற்புரையும், கற்பக விநாயகா கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் முனைவர் கவிதா சுப்பிரமணியன் தலைமையுரை வழங்கினார். அவர்தம் தலைமையுரையில் ஒரு பெண் துணிச்சலுடனும் தன்னம்பிக்கையுடனும் எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும் அவள் வெற்றியடைவாள். இதில் ஆண், பெண் என்ற வேறுபாடு கிடையாது. நான் எப்பொழுதுமே தகுதிக்கும் திறமைக்கும் முன்னுரிமை கொடுப்பேனே தவிர ஆண், பெண் பாகுபாடு பார்ப்பதில்லை. முடியாது என்ற ஒன்று கிடையாது, முயற்சித்தால் யாவையையும் வெற்றியே. ஒரு பெண் பிரச்சனைகளை கையில் எடுத்துக்கொள்ளாது அதனை உதறி எறிந்துவிட்டு வெற்றியை நோக்கியே தன் பயணத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது போன்ற பல கருத்துக்களை எடுத்துரைத்தார். இவர்களை தொடர்ந்து ஜெ.ஜெ. கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் S.அபிராம சுந்தரி, கற்பக விநாயகா செவிலியர் கல்லூரியின் முதல்வர் திருமதி S.சுமித்ரா, கற்பக விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் S.பானுமதி மற்றும் கற்பக விநாயகா மேலாண்மையியல் நிறுவனத்தின் (KIM) இயக்குநர் முனைவர் பா.அனிதாராணியும் வாழ்த்துரை வழங்கினர்.
சமூக சேவகி, தமிழ் எழுத்தாளர் மற்றும் பேச்சாளர் திருமதி ராஜாத்தி சல்மா சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு பேசுகையில், மகளிர் தினவிழா பெண்களின் உரிமைக்காக கொண்டாட தொடங்கினர். அது இன்றைய அளவில் திருவிழா போன்று உலகமெங்கும் கொண்டாடுகிறோம். பெண்கள் பட்டாம்பூச்சிகளாக இல்லாது பீனிக்ஸ் பறவைகளாக தங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும். பெண்கள் அழகு உணர்ச்சிக்குள் அடங்கி போகாது இருக்கின்றவரைக்கும் வெற்றிகளை தனலாக்கி கொள்ள முடியும். ஆண்கள் பிறக்கின்றனர் பெண்கள் உருவாக்க படுகின்றனர். ஒவ்வொரு கட்டத்திலும் அவளை சுட்டிக்காட்டி நாம் உருவாக்கிக் கொண்டிருக்கின்றோம். பெண் உரிமைக்கான சட்டங்கள் உருவாகிய போதிலும் பெண்கள் வாழ்வதற்கே தகுதியற்ற தேசமாக மாறிக்கொண்டிருக்கின்றது என பத்திரிக்கைகள் கூறுகின்றது. பெண்களை சடப்பொருளாகப் பார்க்கும் சமூகம் பெண் குழந்தை பிறப்பதற்கே தடையாய் இருக்கின்றது. பெண் குழந்தைகளை கருவிலேயே அழித்துவிடுகின்றனர். எங்களால் எல்லாம் முடியும் என்ற நம்பிக்கைக் கொண்டு நம் பார்வையை விசாலப்படுத்தி நிமிர்ந்து நடந்தோமானால் இவ்வுலகம் நம்மையும் வணங்கும் என்று எடுத்துரைத்தார்.
மகளிர் தின விழாவையொட்டி பல்வேறு போட்டிகள் நடத்தப்பெற்று மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
இறுதியில் மகளிர் மேம்பாட்டு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் திருமதி சு.ரத்னாதேவி நன்றியுரை வழங்கினார்.