புதுக்கோட்டை ஜெ. ஜெ. கலை அறிவியல் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறையும், இந்திய நுண்ணுயிரியாளர்கள் சங்கமும் இணைந்து மத்திய தொழில்நுட்பவியல் துறையின் நிதி நல்கையுடன் 'அச்சுறுத்திய அச்சுறுத்துகின்ற நோய்களைக் கட்டுப்படுத்துவத்திற்கான புதிய அணுகுமுறைகள்’ (NAMERD - 2023) என்ற தலைப்பின் கீழ் இரண்டுநாள் தேசியக் கருத்தரங்கை நடத்தியது. இதன் துவக்கவிழா 27.01.2023 அன்று நடைபெற்றது. இதில் கற்பக விநாயகா கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் முனைவர் கவிதா சுப்பிரமணியன் தலைமையில் தேசிய பரவு நோயியல் நிறுவனத்தின் விஞ்ஞானி முனைவர் P.கணேஷ்குமார் கருத்தரங்க 'ஆய்வு நூலை' வெளியிட ஜெ. ஜெ. கல்விக் குழுமத்தின் செயலர் நா.சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார். கவிதா சுப்பிரமணியன் தனது தலைமையுரையில், இன்று உலகம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களில் முக்கியமானது நோய் குறித்த அச்சுறுத்தலே. நோய்ச் செய்யும் துன்பத்தைக் காட்டிலும் நோய்க் குறித்த பயமே மக்களைப் பெரிதும் பாதிப்படையச் செய்கிறது. நோய் வந்தாலும் உயிர் இழப்பு ஏற்பாடாது என்ற நம்பிக்கை அறிவியல் உலகம் தருமேயானால் இந்த பயம் போகும். அதற்கு அறிவியல் அறிஞர்கள் அல்லது மருத்துவர்கள் முரண்பட்ட மாறுபட்ட கருத்துக்களைத் தருவது மேலும் குழப்பத்தயே ஏற்படுத்தும். முரண்பாடுகள் இல்லாத ஒருமித்த அணுகுமுறைகளைக் கண்டறிய இம்மாதிரியான கருத்தரங்குகள் நடத்தப்பட வேண்டியது அவசியம் ஆகும். கருத்தரங்கை துவக்கி வைத்து முனைவர் P.கணேஷ் குமார் "அச்சுறுத்திய அச்சுறுத்துகின்ற நோய்த் தொற்றுகளுக்கு ஏதிரான நோய்க் கண்காணிப்பு அமைப்புகளை நிறுவுவது" என்ற தலைப்பில் ஆய்வுரை வழங்கினார். அதில் ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமான 'உலக சுகாதார அமைப்பு' (WHO) உலக மக்களை நோய் அச்சுறுத்தலில் இருந்து காப்பதற்கும், மருத்துவ நடவடிக்கைகளை ஏற்படுத்துவதற்கும் ஆக உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும். இந்த உலக சுகாதார அமைப்பும் உலகளாவிய நோய் கண்காணிப்பு குழுக்களும் (SARS) 'இன்புளுயன்சா' (HINI) போன்ற தொற்று நோய்களுக்கு காரணமான வைரஸ்கள் குறித்த ஆய்வு செய்து அதனை மற்றவர்களுக்கு ஏற்ப புதிய புதிய தடுப்பு முறைகளை உருவாக்கி வருகின்றன. நோய்க் கிருமிகளை எளிதில் அழிக்க இயலாது. அதன் செயல்பாட்டைத் தடுக்க முயன்றால் வேறு ஒரு புதிய கோணத்தில் தாக்குதலைத் தொடங்கும். எனவே, இதைத் சுகாதார அமைப்புகள் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும். ஆகையால், நோய்க் கண்காணிப்பு அமைப்புகள் நோயின் ஆரம்ப நிலையை கண்டறிதல் நோய் தடுப்பு நடவடிக்கைககளை மேற்கொள்ளுதல் எனப் பல படிநிலைகளில் செயல்பட வேண்டும் என்று ஆலோசனைகளை வழங்கினார். உலகக் கண்காணிப்பு அமைப்புகள் தொற்று நோய்க் கிருமிகளைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதால் பல வித நன்மைகள் மனித சமூகத்திற்கு ஏற்படும். அதற்கு ஒரு சிறந்த உதாரணம். கோவிட் – 19. இக்கிருமியை கண்காணிப்பு அமைப்புகள் தொடர்ந்து போராடி தொற்று நோய் பரவலை முன்கூட்டியே கண்டறித்தல், பாதிப்புள்ளனவர்களை நோயில் இருந்து காத்தல், மேலும் பரவாமல் தடுத்தல், பாதிப்பளார்களைத் தனிமைபடுத்தல் என்ற நான்கு கட்டங்களாக பிரித்து செயல்பட்டதாலேயே இன்று மனித சமூகத்தை ஒரு பேரழிவியில் இருந்து காக்க முடிந்தது என்று கூறினார். இரண்டாவது அமர்வில் மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் உயிரிதொழில் நுட்வியில் துறையைச்சார்ந்த முனைவர் P. கோபால் “தாவரவைரஸ்கள் டி. என். ஏ மெத்திலேசனை அகற்றுமா"- என்ற தலைப்பில் பேசினார் விவசாய உற்பத்தியைப் பாதிக்கும் அனைத்து தாவரநோய்களில் பெரும்பாலும் வைரஸ்களால் ஏற்படுகின்றன. ஹிஸ்டோன் மாற்றங்கள் மற்றும் டி.என்.ஏ மெத்திலேஷன் அல்லது siRNA சைலன்சிங் உள்ளிட்ட குரோமாட்டின் அளவில் எபிஜெனிடிக் மாற்றங்களால் இந்த வைரஸ்களின் படையெடுப்பு ஓம்புயிரியின் பாதுகாப்பு அமைப்பால் (Host Defence Mechanism) தடுக்கப்படுகிறது. இந்த அறிவியல் தொழில் நுட்பத்தை நாம் பயன்படுத்துவதன்மூலம் தாவரங்களை வைரஸ் தொற்றுகளில் இருந்து நாம் பாதுகாக்க முடியும் என்று கூறினார். மூன்றாவது அமர்வில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறை நுண்ணுயிரியப் பள்ளியின் உதவிப்பேராசிரியர் முனைவர் சிவகுமார் நடேசன், “பாக்டீரியா நோய்த் கிருமி உருவாக்கும் சூடோமோனஸ் எருசினோசா மருந்தை எதிர்க்கும் வைரஸ்களை தடுப்பதற்கான உத்திகள்” என்ற தலைப்பில் ஆய்வுரை வழங்கினார். அதில் நுண்ணுயிரிகளின் எதிர்பு என்பது மனித ஆரோக்கியத்திற்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. உலகச் சுகாதார அமைப்பு இத்தகைய எதிர்ப்பு பாக்டீரியாக்களை "முன்னணி நோய்க் கிருமிகள்" எனக் குறிப்பிடுகிறது. ஏனெனில், இது நிமோனியா மற்றும் இரத்த ஓட்டத்தில் நேரடியாக தொற்றுக்களை உண்டு பண்ணுகின்றன. சூடோமோனஸ் எருசினோசா அவ்வகையைச் சார்ந்தன. இக்கருத்தரங்கில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் இருந்து முதுநிலை ஆய்வு மாணவர்கள் கலந்து கொண்டு ஆய்வுக்கட்டுரைகளை வழங்கினார். முன்னதாக முதல்வர் ஜ.பரசுராமன் வரவேற்றார். நுண்ணுயிரியல் துறைத்தலைவர் பா.ஜீவன் நன்றி கூறினார்.